கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் வவுனியாவில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்தும் கடந்த 5 வருடங்களாக எமது உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றோம். நானும் இந்த வலியை உணர்ந்தவள் என்ற ரீதியில் இங்கு அனைவர் சார்பாகவும் பேசுகின்றேன். இவ்வாறு நாங்கள் பேசுவதனால் எங்களுக்கும் பல அச்சுறுத்தல்கள் உள்ளன. இருந்தாலும் தினமும் பயந்து முடங்கி வீட்டிற்குள் இருக்க முடியாது எனவே அவை அனைத்தையும் தாண்டி தற்போது இன்னும் ஆழமாக நாம் உணர்வுகளை முன்வைத்து வருகின்றோம்.
அத்துடன் தொடர்ந்தும் பயமுறுத்தல்கள் இருந்தால் அவை ஒரு கட்டத்தில் எங்களிடம் இருந்து விடுபட்டுவிடும் இப்போது நாங்கள் அந்த நிலையில் தான் இருக்கின்றோம். ஆனால் இப்போதும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறமுடியாது. எங்களுக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை நாங்கள் எங்களுடைய உறவுகளை தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
நாம் எல்லா இடங்களிலும் தேடி நீதி கிடைக்காத விடத்தில் தான் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எங்களது அன்பான உறவுகளை தேடவேண்டியது எங்களுடைய பொறுப்பு. அதனை யாரும் தடுத்து விட முடியாது காணாமல் போனவர்கள் என்ற சொல்லுக்குப் பின்னால் பல பிரச்சினைகள் உள்ளன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பு இன்மை உள்ளது. இன்று கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி நுழையும் இராணுவம் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும்? அத்துடன் காணாமல் போனவர்கள் எங்கோ தொலைத்துவிட்ட பொருட்கள் அல்ல. இங்குள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் எங்கு காணாமல் போனார்கள் யாரால் காணாமல் போனார்கள் என்று. ஆனால் சுதந்திரமாக வாழ்கின்றனர் இலங்கை மக்கள் என்று அரசாங்கம் சர்வதேசத்திற்கு கூறிக்கொண்டு ஒரு பகுதி மக்களை கண்ணீருடன் வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் .
எனவே அநீதி இழைக்கப்பட்ட நாங்கள் நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும். எல்லோரும் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.