ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் மனித உரிமை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்த வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும் இந்த 27 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாகவும் பல நாடுகளின் பூகோள கால மீளாய்வு நிலைமைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது. விசேடமாக ஈராக்கிலும் சிரியாவிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை குழுவின் ஏற்பாட்டாளர் சன்ட்ரா பெய்டா அல்லது புதிய மனித உரிமை ஆணையாளர் இந்த வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார்.
கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் புதிய ஆணையாளர் செயித் அல் ஹுசைன் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார். அந்த உரையின்போது இலங்கை விவகாரம் குறித்தும் புதிய மனித உரிமை ஆணையாளர் பிரஸ்தாபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கையின் சார்பில் இந்தக் கூட்டத் தொடரில் அதிகாரிகள் மட்ட தூதுக்குழுவே கலந்துகொள்ளவுள்ளது. அமைச்சர்கள் மட்ட தூதுக்குழு இம்முறை கலந்துகொள்ளவில்லை.
அந்த வகையில் ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதுக்குழு 27 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளது. அத்துடன் சட்ட மா அதிபர் திணைக்களத்திலிருந்து இரண்டு உயர் அதிகாரிகள் ஜெனிவாவுக்கான தூதுக்குழுவில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமையவே முன்னாள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையினால் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவில் 12 பேர் உள்ளடங்குகின்ற நிலையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.