Ad Widget

சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதிபெற அவசியமில்லை

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதிபெற வேண்டிய அவசியமில்லை அவர் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அந்த நாட்டின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை என்று அரசின் பங்காளிக்கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

vasu-theva-nanayakkara

வடமாகாண முதலமைச்சருக்கு மட்டுமல்ல அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களுக்கும் மாகாண செயலாளர்களுக்கும் தலைவர்களுக்கும் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியா சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்த வேண்டுமானால் அரசாங்கத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் ஆளுநரின் அனுமதி பெறவேண்டியது அவசியம் என அமைச்சரவையின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வலவும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது குறித்து கேட்டபோதே அமைச்சர் வாசுதேவ நாணக்கார இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அந்நாட்டு அரசுத்தலைவர்களுடன் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எவ்விதமான தடையும் இல்லை.

இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் விஜயத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தலாம்.

அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களை கோருவதற்கும் முடியும். அதற்கு எந்தவிதத்திலும் தடையில்லை. அத்தோடு மத்திய அரசாங்கத்தின் அனுமதியை கேட்க வேண்டிய அவசியமுமில்லை. வடமாகாண முதலமைச்சருக்கு மட்டுமல்ல அனைத்து மாகாண சபை முதலமைச்சருக்கும் மாகாண செயலாளருக்கும் தலைவருக்கும் இவ்வாறு வெளிநாடு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை. இலங்கையின் அரசியலமைப்பிலும் இதற்கு தடைகள் இல்லை.

வடமாகாணம்

ஆனால், வடமாகாணத்தின் பிரச்சினைகளின் தீர்வுகள் தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விரும்பினால் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரச பிரதிநிதியொருவரையும் தன்னுடன் கூட்டிச்செல்வதே நன்மைபயக்கும். ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியது அத்தியாவசியமாகும்.

இப்பிரச்சினையோடு இலங்கை, இந்தியா மற்றும் தமிழ் தரப்பென மூன்றும் பின்னிப்பிணைந்துள்ளன. இதனை தனித்தனியாக பிரிக்க முடியாது.

சரத் பொன்சேகா

அரசாங்கத்தின் எதிராளியாகவே சரத் பொன்சேகா உள்ளார். எனவே, அவர் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்க தயாரென அவர் கூறுவது அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளிவிடுவதற்கான முயற்சியாகும்.

நாட்டையோ, படையினரையோ, மக்களையோ பாதுகாக்கும் எண்ணம் இவரிடம் இல்லை. இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் பழிவாங்கும் எண்ணமாகும். அத்தோடு சர்வதேச விசாரணையை நாம் எதிர்க்கின்றோம். உள்ளக விசாரணைகள் இடம்பெறும் நிலையில் எதற்கு சர்வதேச விசாரணையென்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Related Posts