வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் பல சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டிருக்கிறோம்! – சம்பந்தன்

நாம் கடந்த காலத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமது வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்திருக்கிறோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடமுடியாது. முஸ்லிம் மக்களையும் எமது தாயகப் பிரதேசத்திலுள்ள அனைத்தத் தரப்பினரையும் ஒன்றிணைத்து இறுதித் தீர்வுக்கான நடவடிக்கையை எடுப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவைர் இரா.சம்பந்தன்.

sampanthan

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு இன்று மாலை 4.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இன்று இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

மஹிந்த அரசுக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யவேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் விருப்பத்தைச் சர்வதேசத்துக்கு நாம் சொல்லவேண்டும்.

கடந்த காலங்களையே சிந்தித்துக்கொண்டிருக்காது விட்ட தவறுகளைத் திருத்தி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.அரசுடன் விட்டுக் கொடுக்கவேண்டிய இடங்களில் விட்டுக்கொடுத்தும் விட்டுக்கொடுக்கக்கூடாத இடங்களில் விட்டுக்கொடுக்காமலும் நாம் செயற்படவேண்டும்.

இந்தியப் பயணம் எங்களுக்கு நல்ல திருப்பதியைத் தந்திருக்கிறது. இந்த பயணத்தின் போது இந்தியப் பிரதமர் மோடி எமக்கு ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக நீங்கள் சர்வதேசத்துடன் நெருங்கிப் பழகுங்கள். அதன்மூலம் மஹிந்த அரசைப் பலவீனப்படுத்த முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி எமக்கு ஆலோசனை வழங்கினார்.

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை எட்டுவதையே நாம் விரும்புகிறோம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இந்தியப் பிரதமர், இந்தியா அதற்கு ஆதரவாக எப்போதும் இருக்கும் என உறுதியளித்தார்.

எம்மைச் சந்தித்த பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்த செய்திக் குறிப்பிலும் மோடி இந்த விடயத்தைக் கோடி காட்டியிருந்தார். இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா நிச்சயமாக உதவும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆதரவுடன் நாமும் எல்லாச் சமூகத்தினரையும்,அரசியல் கட்சிகளையும், தாயகப் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து எதிர்காலத்துக்காகச் செயற்படுவோம். – என்றார்

Related Posts