வடமாகாணத்தை முன்னேற்ற வேண்டும் – பி.பி.ஜெயசுந்தர

வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கையின் முன்னணி மாகாணங்களில் ஒன்றாக வடமாகாணத்தை மாற்ற வேண்டும் என நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார்.

IMG_1664

வடமாகாணத்தின் 2015 ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான வரவு – செலவுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல், யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாணத்தில் வீதிகள் புனரமைப்பு, கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள்> மீன்பிடி, விவசாயம் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக அதிக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்நோக்கம், வடமாகாணத்தை சிறந்த முறையில் முன்னேற்றவேண்டும் என்பதாகும். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இலங்கையிலுள்ள அனைத்து மாகாணங்களையும் ஒரே விதமாகக் பார்க்கும் ஜனாதிபதி, அனைத்து மாகாணங்களின் நலனிலும் அக்கறை கொண்டுள்ளார்.

உட்கட்டுமானம், கல்வி மற்றும் இதர அபிவிருத்தி நடவடிக்கைகள் தெற்கில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று வடக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடமாகாண அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு, வரவு – செலவுத்திட்டம் தொடர்பான தேவைகளை வெளிப்படுத்துகின்றமை நல்லதொரு விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts