ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன நீதிமன்ற தீர்ப்பு அவசியமா அல்லது அரசமைப்பில் மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா என்பது குறித்து சட்டநிபுணர்களுடன் அரசு ஆலோசனை செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னர் குறிப்பிட்ட திகதி குறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் மாதம் 20 திகதி வெளியாகவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் நவம்பர் 19ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
அரசமைப்பின் கீழ் நான்கு வருட காலம் பதவி வகித்த பின்னர் புதிய தேர்தலுக்கு ஜனாதிபதி அழைப்பை விடுக்கலாம்.
இதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் நவம்பர் 21ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அழைப்பை விடுப்பார்.
இந்த அறிவிப்பு வெளியாகி 16 நாள்களுக்குள் வேட்பாளர்களின் பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பெயர்கள் வெளியானதும் ஆகக்குறைந்தது இரண்டு மாதத்துக்குள் தேர்தல் நடைபெறவேண்டும்.