இந்தியாவின் முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மூத்த சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசிய நிறுவனம் மேக்ஸிஸுக்கு விற்கப்பட்டது தொடர்பில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின்னரே சிபிஐயின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இந்தக் குற்றப்பத்திரிக்கையில், மாறன் சகோதரர்களைத் தவிர மலேசியத் தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் நிறுவனத்தின் உயரதிகாரியான அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மற்றும் முன்னாள் டெலிகாம் செயலாளர் ஜே.எஸ்.ஷர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஜே.எஸ்.ஷர்மா உயிரிழந்து விட்டாலும் அவரது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நான்கு நிறுவனங்களின் பெயர்களும் இந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. சன் டைரக்ட் பிரைவேட் லிமிடெட், மேக்சிஸ் கம்யுனிகேஷன்ஸ் பெர்ஹாட், சௌத் ஏசியா என்டேர்டைன்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் மற்றும் அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் பிஎல்சி ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி நடைபெறும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி சைனி தெரிவித்துள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது கடந்த 2011ஆம் ஆண்டே சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில், இந்தக் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாநதி மாறன் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
மலேசியாவில் விசாரணைகள் தொடர்ந்து வருவதால் தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தாத்து, எஸ்.ஏ.பாப்டே மற்றும் ஏ.எம்.சாப்ரே ஆகியோர், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டப் பின்னர் அதற்கு எதிரான மனுவை தாக்கல் செய்யலாம் என்று நேற்று வியாழக்கிழமை கூறினர்.