கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் சந்தை நேற்று மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அமைச்சர்கள், விருந்தினர்கள் ஆகியோரை முன்னதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ வரவேற்று அழைத்து சென்றார்.
தொடர்ந்து சந்தையின் பிரதான வாயில் திறந்து வைக்கப்பட்டது. இதை அடுத்து சந்தையை அதிதிகள் பார்வையிட்டனர். மங்கள விளக்கேற்றப்பட்டு பெயர்ப் பலகையும், நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்யப்பட்டன.
பின்னர் வர்த்தக நடவடிக்கைகளை அதிதிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் வர்த்தகர்களுக்கான உரிமைப் பத்திரங்களையும் வழங்கினர்.
இச்சந்தை 94 கடைகளை கொண்டது. இவற்றில் மரக்கறி, உணவு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் இலகுவாக கொள்வனவு செய்ய முடியும்.
மஹிந்த சிந்தனைக்கு அமைவாக ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கையை கட்டி எழுப்புகின்ற நோக்கில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனை, வழிகாட்டல் ஆகியவற்றுக்கு அமையவே இச்சந்தை நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.
விழாவில் பிரதம விருந்தினராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும், கௌரவ விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அழைக்கப்பட்டு இருந்தனர்.