சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக கழிவு எண்ணையால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த மாகாணசபை அமர்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் வெளிப்படுத்தியிருந்தனர்.
அப்போது தற்காலிக தீர்வாக வடமாகாணசபையால் வலி.தெற்கு பிரதேச சபைக்கு குடிதண்ணீர் விநியோகத்துக்காக தண்ணீர் பவுஸர் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உறுதியளித்திருந்தார்.
அதன்படி பவுஸர் வழங்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிணறுகளைப் பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் சனிக்கிழமை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன், வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபை தலைவர் தி.பிரகாஷ், வலி.வடக்கு (தெல்லிப்பழை) பிரதேசசபை தலைவர் சோ.சுகிர்தன் ஆகியோர் சுன்னாகத்துக்கு விஜயம் செய்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுடன் சுன்னாகம் சிவன்முன்பள்ளியில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. மக்கள் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த உறுப்பினர்கள் இப்பிரச்சினையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சக்தி அமைச்சு, சுற்றுச்சூழல் அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பன தொடர்புபட்டுள்ளன. அவர்கள் இப்படியான பிரச்சினைகள் தெற்கில் இடம்பெற்ற போது உடனடியான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் எமது பிரச்சினையில் அசமந்தமான போக்கையே கடைப்பிடிக்கின்றனர். ஆயினும் நாம் முயற்சி செய்து தீர்வொன்றைப் பெற்றுத்தர முயற்சிக்கிறோம் எனத் தெரிவித்ததுடன், மக்களால் முன்னெடுக்கப்படவுள்ள வழக்குத் தாக்கல் முதலிய நடவடிக்கைகளுக்கும் தாம் பூரண ஆதரவளிப்பர் எனவும் வேண்டிய உதவிகளைப் புரிவர் உறுதியளித்தனர்.