சீனாவில் மிக அரிதான நிகழ்வு என்று செய்தியாளர்களால் வர்ணிக்கப்படும் நடவடிக்கையாக, கைதி ஒருவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்டை வீட்டாருக்கு நஞ்சு வைத்ததாக நியான் பின் மீது குற்றம் சாட்டப்பட்டு, 2006-ம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், தன்னை துன்புறுத்தியே தன்னிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக, பல மீள்விசாரணைகளில் நியான் பின் வாதிட்டுவந்தார்.
நியானுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லையென்று சுட்டிக்காட்டியுள்ள அம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு, இந்த தண்டனையை ரத்துசெய்வதற்கு எடுத்துள்ள காலம், சீனாவில் நிரபராதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடிய அபாயத்தையே காட்டுவதாக தெரிவித்துள்ளது.
சரியான புள்ளிவிபரங்கள் தெரியாதபோதிலும், சீனாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.