“சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சந்திரகுமார் சுதர்சனை (வயது – 21) பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விடுதலை செய்யாவிடின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப் பாட்டங்களை மேற்கொள்வோம்” என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு, இச்சம்பவம் குறித்து அமைதியாகவே இருந்தால் இதேபோல் எதிர்க்காலத்திலும் மாணவர்கள் தாக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடகவிலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மருதானை சி.எஸ்.ஆர். மண்டபத்தில் நடைபெற்றபோதே அதன் ஏற்பாட்டாளரான நஜித் இந்திக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 9 ஆம் திகதி சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்து தாக்கப்பட்ட சுதர்சன் என்ற மாணவன், தன்னைத் தானேத் தாக்கிக் கொண்டதாகக் கூறி பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் அம்மாணவனைக் கைது செய்தது.
இந்தச் சம்பவத்திற்கான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே உயர்க்கல்வி அமைச்சரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அம்மாணவன் தன்னைத் தானேத் தாக்கிக் கொண்டதாகத் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது, சம்பவம் நடைபெற்ற அன்று பலாங்கொடை பொலிஸார் முழுபல்கலைக்கழகத்தையும் சோதனைக்குட்படுத்தினர்.
ஆனால், அப்போதெல்லாம் கிடைக்காத ‘பிளேட்’ மற்றும் கட்டைத்துண்டுகள் சம்பவம் நடைபெற்று 7 நாட்களுக்குப் பின்னர் குறித்த இடத்திலிருந்து கிடைத்துள்ளன. மேலும், பலாங்கொடை வைத்திசாலையின் வைத்திய அறிக்கையின் பிரகாரம், இம்மாணவனுக்கு ‘பேப்பர் கட்டர்’ எனப்படும் ஆயுதத்தாலே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதை வேறு ஒருவரே செய்துள்ளதாகவும் பலாங்கொடை பொலிஸார் மூலம் எமக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், கொழும்பிறகுக் கொண்டுச் சென்றவுடன், ‘பேப்பர் கட்டர்’ பிளேடாக மாறிவிட்டது. அதுமட்டுமல்லாது, மாணவனும் தன்னைத் தானேத் தாக்கிக் கொண்டதாக வைத்திய அறிக்கையிலுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது எப்படி சாத்தியமாகும்? நாட்டில் 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்ற போதிலும், பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் ஜாதி, மதம், மொழி, பேதம் பாராமல் ஒற்றுமையாகவே பழகினோம். ஆனால்,இதுபோன்ற சம்பவங்களுக்குப் பின்னால் நிச்சயமாக அரசியல் தலையீடு உள்ளதை தற்போது எம்மால் புரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
இல்லையெனில், விசாரணைக்கு முன்னரே மாணவன் தன்னைத் தானேத் தாக்கிக் கொண்டதாக உயர் கல்வியமைச்சரும், பொலிஸ் பேச்சாளரும் கூறுவார்களா? அல்லது 7 நாட்களுக்குள் மருத்துவ அறிக்கை மாற்றமடையுமா? இந்தச் சம்பவத்தை மக்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த மாணவன் உண்மையாகவே அவ்வாறு செய்திருந்தால் அவனை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும். அதைவிடுத்து, அம்மாணவனின் பெற்றோருக்கும் அவனைக் காண்பிக்காது, பல்கலைக்கழக சக மாணவர்களுடனும் பேச விடாது செய்வதில் என்ன நியாயமுள்ளது?
இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டு விட்டால் எதிர்க்காலத்திலும் இதேபோன்று ஏனைய மாணவர்களும் தாக்கப்படக் கூடும். ஒரு தமிழ் மாணவன் தாக்கப்பட்டவுடன், தென்பகுதி சிங்கள மாணவர்கள் அமைதியாக இருந்து விடுவார்கள் என்றே அரசு நினைத்துள்ளது.
ஆனால், நாம் அப்படியல்ல. கைது செய்யப்பட்ட சுதர்சனை உடனடியாக விடுதலை செய்யாவிடின், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்றுதிரட்டி நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோம் எனக் கூறிக்கொள்கிறோம்” – என்றார்.
அதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சப்பிரகமுவ மாணவர் சங்கத் தலைவர் ரசிந்து ஜயசிங்க இது குறித்து தெரிவிக்கையில், “எமது பல்கலையில் இருந்து கைதுசெய்யப்பட்ட சுதர்சன் என்ற மாணவன் தன்னைத்தானே பிளேட் மூலம் தாக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆனால், பிளேடினால் ஏற்படுத்தப்பட்ட காயத்திற்கும், ‘பேப்பர் கட்டர்’ மூலம் ஏற்படுத்தப்பட்ட காயத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல நாம். இதற்கு நீதியான விசாரணை நடத்த அரசும் தவறி விட்டது. ஆனால், நாம் இவ்விடயத்தை அப்படியே விட்டு விடப்போவதில்லை. இந்தப் பிரச்சினை மூலம் அம்மாணவனின் கல்விக்கு பாதகம் வந்து ஏற்படக் கூடாது. ஆகவே, இந்த மாணவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்” – என்றார்.