பள்ளிவாசல் மழையினால் இடிந்து விழுந்ததாம் – இராணுவம் இடிக்கவில்லையாம்!

திருகோணமலை, சீனன்குடாவை அண்மித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தினால் இடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் முஸ்லிம்கள் முன்வைத்தக் குற்றச்சாட்டுகளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் இராணுவம் மறுத்துள்ளது.

உண்மை நிலை அறிவதற்காக கருமலையூற்று உயர் பாதுகாப்பு வலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் நேற்றயதினம் நேரில் சென்றிருந்தார்.

5karumalaiyootru

பாழடைந்த நிலையில் காணப்பட்ட பள்ளிவாசல் கட்டடம் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழை காரணமாகவே இடிந்து விழுந்துள்ளதாக இராணுவத்தினால் விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

தங்களது அவதானிப்பில், மழைகாரணமாக குறித்த பள்ளிவாசல் இடிந்துவிழுவதற்கான வாய்ப்பு உண்டா என முதலமைச்சரிடம் பிபிசி தமிழோசை கேட்டபோது, அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் உண்மையிலேயே அது தானாகத்தான் விழுந்திருக்கும் என்று அவர் பதில் அளித்தார்.

இந்தப் பள்ளிவாசல் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று அதன் பெருமை மற்றும் முக்கியத்துவத்தை இராணுவத்திற்கு விளக்கியதையடுத்து அதனை ஏற்றுக்கொண்ட இராணுவம், பள்ளிவாசலை புனரமைத்துத் தருவதற்கு முன்வந்து புனரமைப்பு வேலைகளையும் ஆரம்பித்துள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவிக்கின்றார்.

பள்ளிவாசல் புனரமைப்புப் பணிகளின் பின்னர் முஸ்லிம்களின் தொழுகைக்கான வாய்ப்பு கிடைக்குமா ? என்று முதலமைச்சரிடம் கேட்டபோது, பள்ளிவாசல் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்திருப்பதால் வெளியாரை அங்கு செல்ல அனுமதிப்பதற்கான வாய்ப்புகளோ அல்லது பள்ளிவாசலை விடுவிப்பதற்கான வாய்ப்புகளோ தற்போதைக்கு இல்லை என்று அவரால் பதில் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி

திருமலையில் பள்ளிவாசல் தரைமட்டம்

Related Posts