ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையானது எந்தநோக்கத்தையும் கொண்டிராத ஒன்றாகும். இது போலி நாடகமாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையானது நீதியை கேவலத்துக்கு உட்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதனால் தான் அந்த விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான நான்காவது பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகளின் விசாரணையின் போது சேகரிக்கப்படும் சாட்சியங்கள் கள்ளத்தனமாக இலங்கை மக்களிடம் பெறப்படுபவையாகும். சில வேளையில் பொதுமக்களுக்கு பணம் கொடுத்தும் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
இலங்கை தற்போது மனித உரிமைகள் விடயத்தில் சில நாடுகளிடம் இருந்து பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் இருந்து தனித்துப் போகவில்லை. ஐ.நா. விசாரணையானது குறிக்கோள் அற்றது. அது நீதியானது அல்ல என்பதுடன் இந்த விசாரணை போலி நாடகமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.