மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் மற்றும் உடல் உறுப்புக்கள் கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தலுக்கும் இஸ்ரேலைச் சேர்ந்த முன்னாள் காப்புறுதி உத்தியோகத்தரான அவிகாட் சாண்ட்லர் என்பவருக்குத் தொடர்பு இருக்கின்றது என சந்தேகிக்கப்படுகின்றது.
ஒபிரா டொறின் என்ற பெண் என்பவருக்காக சிறுநீரகங்களைப் பெற முயற்சித்த போது பொலிஸாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சிறுநீரகங்களின் கடத்தலுக்காக இஸ்ரேலில் இருந்து 2 லட்சம் அமெரிக்க டொலர்களை சாண்ட்லர் இலங்கையில் உள்ளவர்களுக்கு பரிமாற்றம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து பல தகவல்களை இஸ்ரேலியப் பொலிஸார் பெற்றுள்ளனர். முன்னர் கடந்த 2012 இல் அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த ஜோன் வைஸ்னர் என்பவர் உடல் உறுப்பு ஒன்றைப் பெறுவதற்காக 3 லட்சத்து 30 ஆயிரம் டொலர்களை வழங்கியிருந்தமையும் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் செய்யப்படும் உறுப்பு தானங்களில் பெரும்பாலானவை திருட்டுத் தானங்களே என்றும் அவை பணத்துக்காகவே செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கை போன்று சீனா எகிப்து இந்தியா பாகிஸ்தான் துருக்கி கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் உடல் உறுப்புகளைப் பெறும் கடத்தும் மையங்களாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.