Ad Widget

சுமார் 50 பேரை போகோ ஹராம் கடத்தியிருப்பதாக சந்தேகம்

நைஜீரியாவில் சத் ஏரியின் கரையில் அமைந்திருக்கும் தோரன் பகா என்ற கிராமத்தின் மீது போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்குப் பின் 50 பேரைக் காணவில்லையென அந்த கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.

boko_haram

சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்தச் சம்பவத்தை பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் தொலைத்தொடர்பு வசதிகள் மிக மோசமாக இருப்பதால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியே பல நாட்கள் கழித்துத்தான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே நைஜீரியாவில் போகோ ஹராம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக அந்நாட்டின் வடகிழக்குப் பகுதி இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போது நடந்திருக்கும் இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் பிடித்துச் செல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வீடுகளுக்குத் தீ வைப்பு

சிலர், தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்டாலும் அவர்களால் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சில வீடுகளுக்குத் தீ வைத்த தீவிரவாதிகள், சுமார் 50 பேரை சுற்றிவளைத்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்றாலும் சில குழந்தைகளும் இருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில இளைஞர்களும் பிடித்துச் செல்லப்பட்டதாக வேறு சிலர் தெரிவிக்கின்றனர். போகோ ஹராமில் சேர்க்கப்படுவதற்காக அவர்கள்பிடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

மாநிலத் தலைநகரான மைதுகுரிக்கு வந்து சேர்ந்த சிலர் இந்தச் செய்திகளைச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து நைஜீரிய ராணுவம் கருத்து எதையும் வெளியிடவில்லை.
ராணுவம் போகோ ஹராம் கலகத்தை அடக்குவதற்கு ஏதுவாக, போர்னோ உள்ளிட்ட மூன்று வட கிழக்கு மாநிலங்களில் கடந்த ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இருந்தபோதும் அப்போதிலிருந்து தாக்குதல் அதிகரித்தவண்ணம்தான் இருக்கிறது.
இந்தக் குழுவினர், பல்வேறு இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபடுவதோடு, தங்கள் இயக்கத்தின் சித்தாந்தத்தை எதிர்க்கும் மிதவாத முஸ்லிம்களையும் கொலைசெய்து வருகின்றனர்.

ஏப்ரல் மாதத்தில் போர்னோ மாகாணத்தில் உள்ள சிபோக் பகுதியில் இருக்கும் ஒரு உறைவிடப் பள்ளியிலிருந்து 200 பெண் குழந்தைகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர்.

2002ல் துவங்கப்பட்ட இந்த இயக்கம் ஆரம்பத்தில் மேற்கத்திய கல்வியை எதிர்ப்பதில்தான் கவனம் செலுத்தியது. இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கத்தோடு 2009ல் தாக்குதல்களைத் துவங்கியது.

இந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். 2013ஆம் ஆண்டில், இக்குழுவை பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா அறிவித்தது.

Related Posts