யாழ். பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி விஞ்ஞான கற்கைகள் பீடம் கிளிநொச்சியில் மிகவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் உடற்பயிற்சி மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவர்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் இயங்கும் விளையாட்டு, மருத்துவ அலகின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ். போதனா வைத்தியசாலையின் மாணவர்கள் விடுதியின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே துணைவேந்தர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
உடற்கல்வி விஞ்ஞானத்தில் இளமாணிக் கற்கைகள் விரைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக உடற்கல்வி விஞ்ஞான கற்கைகளில் இந்தியாவில் கலாநிதிப் பட்டம் பெற்ற மூவர் பேராசிரியர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இந்த வருடத்திற்குள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் மூலம் இந்தக் கற்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
உடற்கல்வி விஞ்ஞான கற்கைகள் பீடம் அமைப்பதற்கு கிளிநொச்சியில் 568 ஏக்கர் நிலப்பரப்புத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவ்விடத்தில், சர்வதேச தரம் மிக்க விளையாட்டு மைதானத்துடன் கூடிய பீடம் அமைக்கப்படவுள்ளது.
இவை அனைத்துக்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடற்கல்வி விஞ்ஞானத்தில் இளமாணிக் கற்கைகளில், விரிவுரைகளுடன் மாணவர்களின் உடல்திறனை விருத்தி செய்யும் விதத்திலான விடயங்களும் உள்ளடக்கப்பட்டு இருக்கும்.
அதற்கான பாட திட்டங்கள் கலாநிதிகள், வைத்தியர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம் உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி விஞ்ஞான அலகு இருக்கின்றது. இதில் டிப்ளோமா தர சான்றிதழ்கள் மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.