“இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பக்கச்சார்பானவை, அநீதியானவை. அதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என பேரவையின் கூட்டத்தொடரிலேயே நாம் உறுதிபடத் தெரிவித்துவிட்டோம்.
இந்நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எமக்குத் தேவையற்றவை” என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணைக் குழு மேற்கொள்ளும் விசாரணைகளையும், அதன் அறிக்கையையும் தாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு வெளியிலேயே பல ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளாமலேயே ஐ.நா. விசாரணைக்குழுவால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும். இந்த விசாரணைகள் நம்பகரமானதாகவும், இலங்கைக்கு நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“ஐ.நா. மனித உரிமைகள் பேர வையின் நடவடிக்கையில் எமக்கு உடன்பாடு இல்லை என்று ஏற்கனவே நாம் அறிவித்துவிட்டோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வின் நடவடிக்கைகள் பக்கச்சார்பானவை என்றும், அநீதியானவை என்றும்கூறி அதன் அறிக்கையை நிராகரித்திருந்தார்.
இவ்வாறாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கையை ஆரம்பம் முதலே நாம் எதிர்த்து வருகின்றோம். அந்த நிலைப்பாட்டில்தான் இன்னமும் உறுதியாக இருக்கின்றோம். இந்நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைள் என்ன என்பது எமக்குத் தேவையில்லை.
எமக்கெதிராக சவால்கள் விடுக்கப்பட்டால் அதை ஏற்போம். நாட்டுக்குள் என்ன செய்யவேண்டுமோ அதை நாம் செய்வோம். உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது இலங்கைக்கு வெளியில் இருந்தவாறு விசாரணைகளை முன்னெடுக்கும் ஐ.நா. விசாரணைக்குழுவினர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பர். அப்போது, அந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து அரசு என்றவகையில் என்ன செய்யவேண்டுமோ அதை நாம் சரியாகச் செய்வோம்” – என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் கெஹலிய.