யாழ்.மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014 மே மாதம் வரையில் 25 ஆயிரத்து 282 வீடுகள் பல்வேறு திட்டங்களின் மூலம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் வீடு அற்றவர்களின் விபரங்கள், கிராம அலுவலர் ஊடாக சேகரிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் மூலம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தவகையில், வடக்கு, கிழக்கில் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் 13,350 வீடுகளும், மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் 100 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் 686 வீடுகளும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக 3,428 வீடுகளும், இலங்கை இராணுவத்தால் 1,700 வீடுகளும், வங்கிகளால் 211 வீடுகளும், சமூக சேவைகள் அமைச்சால் 62 வீடுகளும் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 5,745 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.