இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே ஐ.நா. குழுவால் விசாரணை மேற்கொள்ளமுடியும் – நவிப்பிள்ளை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளாமலே ஐக்கிய நாடுகள் விசாரணை குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியுமென ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

Navaneetham-pillai-tamilmirrar

ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்த ஏராளமான விடயங்கள் வெளிநாடுகளில் உள்ளன. இதனை விசாரணைக்காகப் பயன்படுத்தலாம். விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கிறார்களா இல்லையா என்பது முக்கியமல்ல, ஆதாரங்களை உறுதிசெய்வதிலேயே விசாரணை அறிக்கையின் நம்பகத்தன்மை தங்கியுள்ளது.

வடகொரியா மற்றும் சிரியாவுக்குள் ஐ.நா விசாரணை குழு செல்லாவிட்டாலும் விசாரணைகள் இடம்பெற்றன. இந்த விசாரணைகளின் நம்பகத்தன்மையை அந்த இரு நாடுகளையும் தவிர வேறு எவரும் கேள்வி கேட்கவில்லை.

இலங்கை விவகாரம் இதனை விட வித்தியாசமாக இருக்கும் என நான் கருதவில்லை. இதேவேளை, விசாரணைக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக கவலையளிக்கத்தக்க விதத்தில் சில பிழையான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

இந்தியாவும் தாய்லாந்தும் விசாரணையாளர்களுக்கு விஸா மறுத்தன என்ற ஊடகத் தகவல்கள் பொய்யானவை, பிழையானவை. இலங்கைக்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கோ விசாரணையாளர்கள் எவரும் விசா கோரவில்லை. விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் குறித்தும் ஆலோசனைக் குழுவினர் குறித்தும் இலங்கை ஊடகங்கள் பிழையான உண்மைக்கு புறம்பான தனிப்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன. மீறல்களுக்கு காரணமானவர்களைக் கண்டறிவதற்கும் பொறுப்பாளிகளாக்குவதற்கும் இந்த விசாரணைகள் அவசியமானவை.

இலங்கையர்கள் அனைவருக்கும் நன்மையளிப்பதற்காகவும், நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான வழிவகையாகவும் இந்த விசாரணைகள் ஏற்படுத்தப்பட்டன என்பதை புரிந்துகொள்வது அவசியமானது. இந்த அடிப்படையிலேயே ஐ.நா மனித உரிமை ஆணைக் குழுவால் ஆணையிடப்பட்ட விசாரணையைப் பார்க்கவேண்டும். மோதல் கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது – என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts