பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என அரசாங்கம் வெளியிட்ட பட்டியலிலிருந்து மூவரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என குற்றஞ்சாட்டப்பட்டு 424 புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கிய பட்டியலை அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் 20 ம் திகதி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இப் பட்டியலில் இருந்து துரை எனப்படும் கருணாநிதி துரைரத்தினம், சுதர்சன் கைலாயநாதன் மற்றும் தனுஸ்கோடி பிறேமினி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கடந்த வாரம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் துரைரத்தினம் பிரான்சிலும், கைலாயநாதன் இந்தியாவிலும், பிறேமினி இலங்கையிலும் வசிக்கின்றனர்.
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் பட்டியலில் இடம்பெற்றிருப்போர் தமது பெயர்களை நீக்கக் கோரி தகுதி வாய்ந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்க முடியும். அது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து முடிவெடுக்கும் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.