நாம் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அதேவேளை நாம் தமிழர்கள் என்ற இனத்துவ அடையாளத்தையும் விட்டுக்கொடுத்துவிட முடியாது’ என பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
‘நாம் தமிழர்கள் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ இலங்கையர்கள் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தையோ நாம் ஒரு போதும் இழந்து விடப்போவதில்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட தமிழ் மன்னர்களான பண்டார வன்னியன், எல்லாளன், பரராஜசேகரன் ஆகியோரின் உருவச் சிலைகளின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘எமது இனத்துவ அடையாளங்களில் பிரதானமானது நாம் பேசுகின்ற எமது தாய் மொழியான தமிழ் மொழியே ஆகும். அந்த வகையில் தமிழ் வளர்த்த தமிழ் தூது தனிநாயகம் அடிகளாருக்கு சிலை எடுத்தது போல் இன்னும் தமிழ் வளர்த்த சான்றோர்களுக்கு எமது மண்ணில் சிலை எடுக்க எண்ணியுள்ளோம்.
சமூகப்பெரியார்கள், ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் வரலாற்று தலைவர்கள் ஆகியோருக்கும் நாம் சிலை எடுக்க எண்ணியுள்ளோம்.
எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் எமது மக்களுக்கே சொந்தம் என்பதை அடுத்து வரும் எமது சந்ததிகளுக்கும் எடுத்து சொல்வதற்காக இன்னும் யார் யாருக்கு சிலை எடுக்க வேண்டுமோ அவர்களுக்கும் நாம் சிலைகளை எழுப்ப தீர்மானித்திருக்கிறோம்.
எமது வரலாற்று வாழ்விடங்கள் எமக்கே சொந்தம் என்ற உரிமையை அடையாளப்படுத்தவே நாம் இந்த எமது மண்ணில் இதுபோன்ற சிலைகளை நிறுவி வருகின்றோம்’ என்று அவர் தெரிவித்தார்.