அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படலாம். அது அடிப்படை சம்பள அதிகரிப்பாகவோ அல்லது அல்லது கொடுப்பனவாகவோ அமையலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டத்தை நோக்கியதான வகையில் பல்வேறு தரப்புக்களுடன் ஜனாதிபதி தற்போது கலந்துரையாடல்களை நடத்திவருகின்றார். 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான நடுத்தர கால வரவு செலவுத்திட்டக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
கேள்வி அடுத்த வரவு செலவுத்திட்டம் எப்போது?
பதில் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் வரவு செலவுத்திட்டத்தை நோக்கியதான வகையில் பல்வேறு தரப்புக்களுடன் ஜனாதிபதி தற்போது கலந்துரையாடல்களை நடத்திவருகின்றார். அதாவது இம்முறை பல்வேறு துறைசார்ந்த தரப்புக்களையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்திவருகின்றார்.
அதுமட்டுமன்றி திட்டங்களையும் யோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு இன்று (நேற்று) அமைச்சரவையின் போது அமைச்சர்களுக்கும் கூறப்பட்டது. அவர்கள் அது குறித்து தமது எண்ணங்களையும் யோசனைகளையும் கூறுவார்கள். அத்துடன் 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான நடுத்தர கால வரவு செலவுத்திட்டக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கேள்வி வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. எதிர்காலத்தில் அதனை குறைப்பதற்கு எண்ணம் உள்ளதா?
பதில் அது தவறான புரிந்துகொள்ளல் ஆகும். அதாவது யுத்த காலத்தில் அரசாங்கம் ஆயுதங்களை குறுகிய கால நடுத்தரகால மற்றும் நீண்டகால கடன்கள் அடிப்படையிலேயே கொள்வனவு செய்தது. அந்தக் கடன்களை தற்போதுதான் செலுத்திவருகின்றோம். எனவே நிதித்த தேவை உள்ளது.
கேள்வி வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு உள்ளதா?
பதில் இருக்கலாம். கடந்த காலம் முழுவதும் அதிகரித்துவந்துள்ளோம்.
கேள்வி சம்பளம் அதிகரிக்கப்படுமா? அல்லது கொடுப்பனவு அதிகரிக்கப்படுமா?
பதில் எதாவது ஒன்று செய்யப்படலாம். அரச ஊழியர்களின் கைகளுக்கு பணம் கிடைக்கும். ஆனால் அரச ஊழியர்களின் குறைந்த மட்ட சம்பளத்தை 7100 ரூபாவிலிருந்து 13400 வரை எமது அரசாங்கமே அதிகரித்தது.
கேள்வி ஊவா தேர்தலில் அரசாங்கத்துக்கு பாதகமான நிலைப்பாடு உள்ளதா?
பதில் ஊவா தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கை எம்மிடம் உள்ளது. அதற்கு தேவையான வகையில் அபிவிருத்திகளை நாங்கள் செய்துள்ளோம்.