‘ஆளுங்கட்சி அரசாங்கத்தை விட தமிழர்களுக்கு மிக மோசமான சக்தியாக இருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான். இவர்களது மோசமான அரசியல் செயற்பாடுகள்தான் இன்றுவரை தமிழர்கள் எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது’ என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.
பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் வாழ்வாதார தேவைகள் தொடர்பான விடயங்களை கண்டறிந்து அவர்களது வாழ்வியலை மேம்படுத்துவது தொடர்பான சந்திப்பொன்று, சுன்னாகம் தெற்கு, காந்திரூபி சனமூக நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
‘தற்போது தமிழர்களது கலாசாரம், குறிப்பாக யாழ்ப்பாண இளைஞர்களது கலாசாரம் முற்றாக மாறுபட்ட வகையில் சென்றுகொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த மாற்றத்தை ஆரம்பத்தில் கட்டுப்படுத்தாது விடுவோமானால், யுத்தத்தின் அழிவுகளிலிருந்து மீண்டுவரும் தமிழ் சமூகம் மறுபடியும் ஒரு பாரிய சமூகச் சீரழிவுக்கு முகங்கொடுத்து பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும்.
ஆயுதப் போரட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமற் போனவற்றை நாங்கள் இலங்கை அரசுடன் இணைந்து பேசித்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் சிறந்த வழியுமாகும்.
தமிழ் மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் அரசியல் அதிகாரங்களுடன் சுயநிர்ணயத்துடன் அபிவிருத்தி மட்டங்களை அடைந்தவர்களாக வாழவைக்கவே கூடியளவு பணிகளைச் செய்து வருகிறோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.