பாடசாலை மாணவர்கள், மற்றும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பான செய்திகளை வெளியிடும் போது மிகவும் பொறுப்புணர்வுடன் ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
அலரிமாளிகையில் நேற்று ஊடகவிலயாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
அண்மையில் நான் வைத்திய நிபுணர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடினேன். இதன்போது பாடசாலை பிள்ளைகள், தற்கொலை செய்து கொள்வது தொடர்பில் வெளியிடப்படும் செய்திகளானது ஏனைய பிள்ளைகளையும் அத்தகைய நிலைக்கு தள்ளுவதாக அமைந்துள்ளது. இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வைத்திய நிபுணர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
நில்வலகங்கையில் குதித்து பாடசாலை மாணவி தற்கொலை என செய்தி வெளியாகியிருந்ததாகவும், அதனை அடுத்து நில்வலகங்கையில் நான்கு அல்லது ஐந்து மாணவர்கள் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், அவர்கள் சுட்டிக்காட்டினர். இவ்வாறு தற்கொலை தொடர்பில் செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயற்படவேண்டும். வெளியிடப்படும் செய்திகள் சிறுபிள்ளைகள் மத்தியில் தற்கொலையை ஊக்குவிப்பதாக அமையக்கூடாது. சிறுவிடயங்களுக்குக் கூட தற்கொலைகள் இடம் பெறுவதற்கு இத்தகைய செய்திகள் துணைபோய்விடும். இந்த விடயத்தில் ஊடகவியலாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.