Ad Widget

ஆளுநர் அழைத்தால் அதிகாரிகள் தவழ்ந்து செல்கின்றனர் – சர்வேஸ்வரன்

kanthaiya-sarveswaranவடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தொலைபேசியில் அழைத்தால் தவண்டு சென்று ஆளுநரை சந்திக்கும் அதிகாரிகள், வடமாகாண சபையினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்த போதும் அதனை உதாசீனம் செய்வதினை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (13ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாணசபைக் கட்டிடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது.

இந்த அமர்வில் வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம், முதலமைச்சர் நியதிச்சட்டம், மற்றும் முத்திரை வரி கைமாற்றல் சட்டம் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, கட்டாயமாக வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்ற நிலையிருந்த போதும், அவர் கலந்துகொள்ளவில்லை.

இதனையடுத்து, இது தொடர்பில் சபை உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

அவ்வாறு சர்வேஸ்வரன் தனது கருத்தினை முன்வைக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

அதிகாரிகள், தங்களுக்கு உடல்நலக்குறை அல்லது வேறு காரணங்கள் இருந்தால் அது தொடர்பில் அறிவித்த பின்னரே விடுமுறையினைப் பெறமுடியும். இருந்தும் எவ்வித காரணங்களும் இன்றி வடமாகாண சபை அமர்வில் கலந்துகொள்வது இல்லை என்றும் தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாண சபையின் வரவு – செலவுத்திட்டச் சமர்ப்பின் போதும், பிரதம செயலாளர் கலந்துகொள்ளவில்லை. இன்றும் அவ்வாறானதொரு நிலைமை. ஆகவே இது தொடர்பில் வடமாகாண சபையில் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு, அது சபையில் நிறைவேற்றப்படவேண்டும்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (04) தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு வடமாகாண சபையின் சிறப்புரிமையினை மீறும் செயற்பாட்டில் பிரதம செயலாளர் நடந்துகொள்கின்றார் எனத் வழக்குத் தொடரவேண்டும். அத்துடன், சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாண சபை அமர்வில் கலந்துகொள்ளவேண்டும் என சுற்றுநிருபம் ஒன்று அதிகாரிகளுக்கு அனுப்பப்படவேண்டும் இன்றைய அமர்வில் முதலமைச்சரின் செயலாளாரைத் தவிர வேறு எந்த அமைச்சின் செயலாளரும் அமர்வில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதம செயலாளர் கட்டாயமாக இந்த அமர்வில் கலந்துகொண்டிருக்க வேண்டும். அவர் கலந்துகொள்ளாமை தவறு என எதிர்க்கட்சி உறுப்பினர் அப்பாஸ் அப்துல் றிப்கானும் தெரிவித்தார்.

Related Posts