வணக்கஸ்தலங்கள், சமய அடையாளங்கள் நிறுவுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்

New-Lawsசகல சமயங்களினது வணக்கஸ்தலங்களையும் சமய அடையாளங்களையும் நிறுவுவதை ஒழுங்கு படுத்துவதற்கென, புத்த சாசன மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சினால் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

வணக்கஸ்தலங்கள் நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் சில பிரதேசங்களில் எழுந்த அமைதியற்ற சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய சமய வழிபாட்டு ஸ்தலங்களை நிர்மாணிப்பது தொடர்பில், சமய விவகார அதிகார சபையிடமிருந்து முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கும் ஒரு சுற்றறிக்கையை புத்த சாசன மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சு, கடந்த 2008ஆம் ஆண்டில் வெளியிட்டது.

மேலும், வழிபாட்டிடம் என்பதன் வரைவிலக்கணத்தை அமைச்சு கடந்த வருடம் ஒக்டோபரில் வெளியிட்ட சுற்றறிக்கை மூலம் விரிவுபடுத்தியிருந்தது.

இந்த சுற்றறிக்கையின் படி பௌத்த விகாரைகள், இந்துக் கோவில்கள், பள்ளிவாயல்கள், தேவாலயங்கள், வழிபாட்டு நிலையங்கள், தியான மண்டபங்கள், சமய கற்கை நிலையங்கள் மற்றும் பொது இடங்களிலுள்ள சமய அடையாளங்கள் ஆகிய சகலவற்றையும் இந்த சுற்றறிக்கை உள்ளடக்குகின்றது.

இருப்பினும், இந்த சுற்றறிக்கை அரசியலமைப்பின் உறுப்புரை 10 உடன் முரண்பட்டது. ஒவ்வொருவருக்கும் சிந்தனை சுதந்திரம், சமய சுதந்திரம், விரும்பிய சமயத்தை பின்பற்றும் சுதந்திரம் உள்ளதென இந்த உறுப்புரை 10 கூறுகிறது.

இதனால், சமய ஸ்தாபனங்களை அமைப்பது கட்டுப்பாடின்றி நடைபெற்றது. குறித்த சமயமொன்றுடன் தொடர்புபடும் மக்கள் தொகையுடன் ஒப்பிடுமிடத்து சில இடங்களில் உள்ள சமய வழிபாட்டு ஸ்தலங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே, நாடாளுமன்றில் ஒரு புதிய சட்ட மூலத்தை நாம் கொண்டவரவுள்ளோம். இது தற்போது சட்ட வரைஞர் திணைக்களத்தில் உள்ளது. பின்னர் இது அமைச்சரவைக்கு அனுப்பப்படும். சகல சமய பெரியார்களுடனும் ஆலோசித்த பின்னர் இந்த சட்டமூலம் தாயாரிக்கப்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts