சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் மின்சார நிலைய கழிவு ஒயில் கலந்து வருவது தொடர்பாக நேற்று மாலை 4 மணியளவில் சுன்னாகம் கதிரமலை சிவன் கோயிலில் அப் பகுதி மக்கள் கூடி கலந்துரையாடினர்.
சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் கிணறுகளில் ஒயில் கலப்பதால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
கடந்த மூன்று வருடங்களாக இந்தப் பிரச்சினை உள்ள போதும் இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் தாங்களாக கூடி ஆராய்ந்தனர்.
கலந்துரையாடலின் இறுதியில் 10 பேர் அடங்கிய குழு ஒன்று இப் பிரச்சினை தொடர்பான மேலதிக செயற்பாடுகளுக்காக அமைக்கப்பட்டது.
இதேவேளை இப் பிரச்சினை தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்படுகின்றன எனினும் இதுவரை அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் சட்டநடவடிந்நைகள் எடுக்கமுடியாதுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
எதிர்வரும் வாரம் மனித உரிமை ஆணைக்குழுவில் இப் பிரச்சினை தொடர்பாக முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பிரதேச வைத்திய அதிகாரி ஜெயக்குமார், வைத்தியர் சங்கர்,பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.