சபரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் மீது தாக்குதல்

இலங்கையின் சபரகமுவ பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

sabaragamuwa_students

மாணவர்கள் விடுதிக்குள் வைத்து முகமூடி அணிந்தவர்களினால் அவர் தாக்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளாகிய மாணவன் கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் எனபவரே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

இரவு நெடுநேரம் படித்துவிட்டு உறங்கச் சென்றிருந்த அந்த மாணவன் இடையில் இயற்கைத் தேவையைக் கழிப்பதற்காக தனது அறைக்கு அருகில் உள்ள கழிப்பறைக்குச் சென்றபோதே அந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்த ஒரு நபர் தனது வாயைப் பொத்திப் பிடித்திருக்க, மற்றுமொரு முகமூடி அணிந்த நபர் தன்னைத் தடியொன்றினால் பலமாகத் தலையில் அடித்ததாகவும் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் காயமடைந்த மாணவன் தெரிவித்தூள்ளார்.

மயக்கம் தெளிந்தபோது விடுதிக்கு வெளியே பற்றையொன்றில் தான் வீகப்பட்டு கிடந்ததாகவும் கழுத்தில் கயிறு ஒன்று இறுக்கியிருந்ததனால் கழுத்திலும் அடிபட்ட தலையிலும் வேதனை இருந்ததாகவும், அந்த வேதனையோடு விடுதிக்குச் சென்ற போது சக மாணவர்கள் அவரைக் கண்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காயமடைந்த மாணவர் தற்போது பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரகின்றார்.

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் கடிதம்
மாணவர்களுக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் கடிதம்

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கொச்சைத் தமிழில் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடந்த மாதம் 20 ஆம் திகதி மாணவர்களின் விடுதிக் கழிப்பறையொன்றில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், இதனையடுத்து அதேபோன்ற சுவரொட்டிகள் ஞாயிறன்று மீண்டும் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அந்த கழிப்பறையிலேயே முகமூடி நபர்களினால் மாணவன் சுதர்சன் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து, சபரகமுவ பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts