தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதங்களை முன்வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் கட்டுரை வெளியிட்டதற்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் மன்னிப்புக் கோரியுள்ளது.
இது குறித்து இலங்கை பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், முறையான அனுமதியின்றி அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதாகவும் இலங்கை அரசின் நிலைப்பாட்டையோ, பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைப்பாட்டையோ அந்தக் கட்டுரை பிரதிபலிக்கவில்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியப் பிரதமரிடமும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடமும் மன்னிப்புக் கோருவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த இணைய தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்படுவது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதும் கடிதங்களை முன்வைத்து, கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் தமிழக முதலமைச்சர், இந்தியப் பிரதமர் ஆகியோரை வைத்து சித்திரம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. சர்ச்சைக்குரிய விதத்தில் அதற்கு தலைப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம்
ஜெயலலிதா மோதிக்கு எழுதும் கடிதங்கள் பற்றிய கட்டுரை இலங்கை அரசு பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியாகியிருந்தது.
இலங்கையின் பாதுகாப்புத் துறை இணைய தளத்தில் வெளியார் கருத்துத் தெரிவிக்கும் பகுதியில் ஷெனாலி டி வடுகே என்பவரால் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை குறித்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அந்தக் கட்டுரை இழிவுபடுத்தியிருப்பது தமிழக முதல்அமைச்சரை மட்டுமல்ல; இந்திய நாட்டுப் பிரதமரையும்தான் இழிவுபடுத்தியிருக்கிறது என்ற எண்ணத்தோடு, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.கவினர் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இன்று காலையில் இந்திய நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் இது குறித்துக் கேள்வியெழுப்பினார்.
தமிழக முதல்வர் கடிதம்
தமிழகத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சகம், இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா தன் அதிருப்தியைத் தெரிவிக்க உத்தரவிட வேண்டுமென்றும் இலங்கை அரசை நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரச் செய்ய வேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை பாதுகாப்புத் துறை இணைய தளத்திலிருந்து அந்தக் கட்டுரை அகற்றப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தால் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?