வடமாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் கடந்த இரண்டு மாத காலத்தினுள் ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்து அறுநூற்று முப்பத்திநான்கு கிலோ பார்த்தீனியம் பொதுமக்களிடமிருந்து கொள்வனவு செய்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவரும் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒருகட்டமாகத் தற்போது பொதுமக்களிடம் இருந்து பார்த்தீனியத்தைக் கிலோவுக்கு 10 ரூபா வீதம் கொடுத்துக் கொள்வனவு செய்து பின்னர் அதனை எரித்து அழிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த யூன் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இது வரையில் மூன்று கட்டங்களாக இடம்பெற்றுள்ளது. இதில் முதலாம் கட்டமாக 9,230 கிலோவும், இரண்டாம் கட்டமாக 27,470 கிலோவும் மூன்றாம் கட்டமாக 73,934 கிலோவும் பொதுமக்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதில் மூன்றாம் கட்டப் பார்த்தீனிய ஒழிப்பில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை (31.07.2014) புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், அனந்தி எழிலன் பிரதி விவசாயப்பணிப்பாளர் சி.சிறிபாலசுந்தரம் ஆகியோரும் பார்த்தீனியம் ஒழிப்பில் ஈடுபட்ட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே, கடந்த இரண்டு மாத காலத்தில் கட்டம் கட்டமாக அழிக்கப்பட்ட பார்த்தீனியத்தின் எடை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.