Ad Widget

முதலமைச்சர் எதிர் பிரதம செயலாளர் வழக்கின் தீர்ப்பு புதனன்று!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமக்கு வழங்கிய ஒழுங்கு விதிகள் தொடர்பான சுற்றுநிருபம் தமது அடிப்படை உரிமைகளை மீறுகின்றது எனத் தெரிவித்து மாகாணத்தின் பிரதம செயலாளர் திருமதி விஜயலஷ்மி ரமேஷ் தாக்கல் செய்திருந்த வழக்கின் மீதான தீர்ப்பு நாளை புதன்கிழமை வழங்கப்படவுள்ளது.

vikky0vijaya

இந்த வழக்கு நேற்றுத் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன்னால் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.

வடமாகாணத்தை விட்டுத் தாம் வெளியில் செல்வதாயின் முதலமைச்சருக்கு முன்கூட்டியே எழுத்து மூலம் அறிவித்து அனுமதி பெறவேண்டும் என்பது உட்பட மேற்படி சர்ச்சைக்குரிய சுற்றுநிருபத்தின் ஒழுங்குவிதிகள் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என இந்த வழக்கில் பிரதம செயலாளர் தெரிவித்திருந்தார்.

நேற்று விசாரணையின் போது முதலமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பிரதம செயலாளர் விடுமுறை எடுப்பதாக இருந்தாலோ அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வதாக இருந்தாலோ முதல்வருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும், அத்தோடு, மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சட்டபூர்வமான உத்தரவுகளுக்கு பிரதம செயலாளர் கீழ்படிந்து நடக்க வேண்டும், மாகாணசபையின் செயற்பாடுகளைக் குழப்பாத வண்ணம் அவரின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனச் சுட்டிக்காட்டி வாதிட்டார்.

மேலும், புதிய செயலாளர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கும் போது தன்னுடைய அனுசரணையுடன் நியமிக்க வேண்டும் என்ற தமது சட்டபூர்வமான கோரிக்கையானது எதிர்காலத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை சட்டத்தரணி மூலம் நீதிமன்றுக்கு உறுதிப்படுத்தினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோமின் தயாசிறி, பிரதம செயலாளரின் தொழிலுரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாகாண சபையின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்றும், விஜயலக்ஷ்மியின் தொழில் சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தார்.

Related Posts