சுன்னாகம் மின்சார நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.
மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியினைச் சூழவுள்ள கிணறுகளிலுள்ள நீரில் கழிவு எண்ணை கலந்து, அந்நீர் குடிநீராக பாவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்ள பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், நீரினைப் பெறுவதற்கு அதிக தூரம் செல்லும் நிலை காணப்படுகின்றது.
இதனையடுத்து, அம்மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக பிரதேச சபையினால் 1500 லீற்றர் கொள்ளவுள்ள 5 நீர்த்தாங்கிகள் கொள்வனவு செய்யப்பட்டு, அப்பகுதியில் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, எதிர்வரும் வாரம் முதல் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் என்ற ரீதியில் அந்த நீர்த் தாங்கிகளில் பிரதேச சபையினால் நீர் நிரப்பப்படும் எனவும் அதனை அப்பகுதி மக்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் மேலும் கூறினார்.