ஆஸ்திரேலியாவால் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட தமிழ் தஞ்சம் கோரிகள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் உள்ள தடுப்புக் காவல் மையம் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் அரச தாக்குதல் மற்றும் தொந்தரவுகளிலிருந்து தப்பியோடும் உண்மையான அகதிகள் அல்ல என்றும், இந்தியாவிலிருந்து கடந்த மாதம் படகில் வந்த பொருளாதாரக் குடியேறிகளாக இருக்கலாம் என்றும் கருதுவதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது.
இவர்கள் இப்போது இந்திய அதிகாரிகளால் விசாரிக்கப்படுவார்கள். அவர்களில் இந்தியப் பிரஜைகள் அல்லது இந்தியாவில் வதிவிடம் பெற்றவர்கள் யாராவது இருந்தால் அவர்களை மீண்டும் பெற்றுக்கொள்வதாக இந்தியா உறுதியளித்திருக்கிறது.
நாடு திரும்ப மறுக்கும் எவரையும் ஆஸ்திரேலியா தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் தனது விசாரணை முகாம்களுக்கு அனுப்பக்கூடும்.
இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் பேசிய ஆஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசன், இவர்கள் அனைவரும் இந்தியாவின் புதுச்சேரிக்கு அருகில் இருந்து வந்தவர்கள் என்றும், இந்தியாவில் இவர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சினை ஒன்றும் இல்லை என்பதால், இவர்களைப் பொருளாதாரக் குடியேறிகளாகவே கருதவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்தக் கருத்து யூகத்தின் அடைப்படையில் அமைந்தது என்கிறார் ஆஸ்திரேலியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன். அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, இந்த அகதிகளை முறையாக விசாரித்து முடிவெடுக்கவேண்டும் , இந்தியாவை இதில் நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறார் .