இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடுவதாக படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 28 வருடங்களுக்குப் பிறகு வைரமுத்து எழுதும் பாடலை இளையராஜா பாடுகிறார் என திரையுலகில் ஆச்சரிய குரல்கள். ஒரே நாளில் இடம் பொருள் ஏவலுக்கு காசு செலவில்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இலவச விளம்பரம்
ஆனால் அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் மறுத்துள்ளது இளையராஜா தரப்பு. இளையராஜாவின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றமான இசைஞானி ஃபேன்ஸ் கிளப் கடும் கண்டனுத்துடன் கூடிய மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு.
இசைஞானியின் அன்பான ரசிகர்களே, இன்று ஒரு வார பத்திரிகையில் இசைஞானி அவர்கள் சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை யுவன் இசையில் பாடப்போவதாக செய்தி வந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான தகவல். எந்த காலத்திலும் வைரமுத்து எழுதிய பாடலை பாடப்போவது கிடையாது. இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி தன் படத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
அதோடு கடந்த சில மாதங்களாக வைரமுத்து அவர்கள் எப்படியாவது இசைஞானியுடன் இணைந்து விட வேண்டும் என்று பல வழிகளிலும் முயற்சி செய்து வந்தார். பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில், “ராஜாவை எப்படியாவது சமாதானப்படுத்துங்கள். நானே பாடல்களை எழுதுகிறேன்” என்று சொல்லி அனுப்ப, பாலாவும் இதை இசைஞானியிடம் தெரிவித்து அனுமதி கேட்டார். அதற்கு இளையராஜா, “தாராளமாக அவரை வைத்து பாட்டு எழுதிக்கோ… நான் இசையமைக்க மாட்டேன்” என்று கடுமையாக மறுத்து விட்டார். அதன் பிறகே அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில்தான் யுவன் இசையில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப் போவதாக ஒரு செய்தியை பரவ விட்டிருக்கிறார்கள். நேரடியாக கேட்டும் ராஜா சார் மறுத்து விட்டதால், இப்படி கொல்லைப்புறத்தின் வழியாக நுழைய முற்சிக்கிறார் வைரமுத்து என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். வெளியில் மேடைகளில், ‘நான்தான் ராஜாவை ஒதுக்கி வைத்திருக்கிறேன்’ என்பதுபோல் காட்டிக்கொண்டு, உள்ளுக்குள் அவரோடு எப்படியாவது இணைந்து விடவேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறார் வைரமுத்து.
அதே படத்தில் தனுஷ் எழுதிய ஒரு பாடலை பாட வைப்பதற்காக தன் அப்பாவிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்துப்போயிருகிறார் இரண்டு மூன்று முறை யுவன். “டாடி ஒரு விஷயம் கேட்கணும்…” என்று கூறி, பயம் காரணமாக அதைக் கேட்காமலே விட்டிருக்கிறார். காரணம் ராஜா சார் “என்ன யுவன்” என்று கேட்டாலே யுவனுக்கு வாயடத்துப் போய்விடும். அப்படியிருக்கும்போது வைரமுத்து எழுதிய பாடலைப் பாடுங்கள் என்று சொல்ல யுவனுக்கு எப்படி தைரியம் வரும்? வாழ்க்கை கொடுத்தவருக்கு எதிராகவே பல ஆண்டு காலம் நடந்துகொண்டிருக்கும் வைரமுத்துவின் பாடலை ராஜா சார் பாடுகிறார் என்று சொன்னால் நம்புவதற்கு இசைஞானி ரசிகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.
இந்த விளக்கத்துக்குப் பிறகும் இன்று காலை வெளிவந்துள்ள பிரபல இங்க்லீஷ் நாளிதழில் இளையராஜா வைரமுத்துவின் பாடலை பாடுகிறார், சிலர் சொல்வது போல் அது தனுஷ் எழுதிய பாடல் அல்ல என்று சீனு ராமசாமி அறுதியிட்டு தெரிவித்துள்ளார்.
குட்டையை குழப்பி விளம்பரம் தேடுவது என்பது இதுதானோ?