தமது உயிரையும் துச்சமாக மதித்து ஊடகப்பணியில் ஈடுபட்டு வரும் எமது ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்து வரும் அரசாங்கம், இதற்கான விளைவுகளை மிக விரைவிலேயே அனுபவிக்கும் என வட மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.
காரைநகரிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான கல்விச் செயலமர்வு, காரைநகர் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய கஜதீபன் கூறியதாவது,
‘இன்றைய சூழ்நிலையில் தாயகப் பகுதியில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் பாரிய சவால்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றார்கள். பெற்றோரை அச்சுறுத்தும் சவால்கள் பலவாக இருந்தாலும் இன்றைக்கு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது போதைப்பொருள் பாவனையாகும்.
மிகப் பலமான பின்னணியுடன் போதைப்பொருளானது எம்மக்கள் மீது திணிக்கப்பட்டு வருவதாக நான் நம்புகின்றேன். போதைப்பொருள் வர்த்தகத்தின் மையமாக இலங்கை விளங்குவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிக்ன் காண்டிருக்கின்றனர்.
இத்தருணத்தில் போதைப் பொருட்களை தங்களுக்கு எதிரானவர்களைப் பழிவாங்குவதற்கும், பயன்படுத்தப்பட்டு வருகின்றனவா? என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
கொழும்பில் இடம்பெறவிருந்த ஊடகவியலாளர் பயிற்சி நெறிக்காக சென்றுகொண்டிருந்த எமது யாழ். மாவட்ட ஊடவியலாளர்கள், ஓமந்தையில் வைத்து சோதனை எனும் பெயரில் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த வாகனத்தில் போதைப்பொருள் காணப்பட்டது என்று கூறி, நீண்ட பல மணித்தியாலங்கள் அநாவசியமாக காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்பின்பு பல அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கொழும்பு சென்று சேர்ந்த பின்பும் இவர்களை பயங்கரவாதிகள் என்றும், இவர்களை இப்பிரதேசத்தில் உள்நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி சிலர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இப்படியான ஒரு சம்பவம் ஒரு சில மாதங்களுக்கு முன்பும் இடம்பெற்றிருந்தமையை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ஓமந்தையில் வைத்து போதைப்பொருள் இருப்பதாகக்கூறி மறித்து அவமானப்படுத்தியமையும் கொழும்பில் வைத்து பயங்கரவாதிகள் என ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் ஒரே தரப்பினராக ஏன் இருக்க முடியாது? நாங்கள் அப்படித்தான் கருதுகின்றோம். அவ்வாறே குற்றஞ்சாட்டுகின்றோம். இது தவறாயின் சம்பந்தப்பட்டவர்கள் அதை ஆதாரத்துடன் நிரூபித்துக்காட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அரசாங்கம் புரியும் சகல தவறுகளையும் ஆதாரத்துடன் எமது மக்களுக்கு வெளிப்படுத்தி ஊடகப் பணியாற்றி வரும் ஊடவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்றிருக்கக்கூடிய இச்சம்பவம், அந்த ஊடகவியலாளர்களை முன்னரிலும் வேகமாக செயற்படத் தூண்டும்.
சினிமாப்படப் பாணியில் நடந்திருக்கக்கூடிய இச்சம்பவம், இலங்கையில் தமிழ் ஊடகத்துறையினருக்கு எவ்வாறான அச்சுறுத்தல் நிலவுகின்றது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்துவரும் அரசாங்கம், இதற்கான விளைவுகளை மிக விரைவிலேயே அனுபவிக்கும் என நம்புகிறேன்.
இச்சம்பவத்துக்கு எதிராக பாரியளவிலான போராட்டங்களை வடக்கு, கிழக்கு எங்கிலும் முன்னெடுத்து, இன்றைய நாட்டின் உண்மை நிலையினை வெளிப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். பல சவால்களை சந்தித்துவரும் இன்றைய மாணவர்கள் அவற்றை முறியடித்து கல்வியில் சாதனை நிலைநாட்ட வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன், இளைஞர் சம்மேளன நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.