அகதித்தஞ்சம் கோரி படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தமிழர்கள் 157 பேரில் இந்திய குடிஉரிமை உள்ளவர்களையும், இந்திய உள்நாட்டுச் சட்டப்படி யாரை திரும்ப அழைத்துக்கொள்ளவேண்டுமோ அவர்களையெல்லாம் திரும்ப அழைத்துக்கொள்வோம் என இந்தியா அறிவித்திருக்கிறது.
இந்த 157 பேர் தொடர்பாக இந்திய அரசு முதல் முறையாக தனது நிலைப்பாட்டை சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த 157 பேரும் இந்திய அகதி முகாம்களில் இருந்து சென்ற இலங்கை தமிழ் அகதிகள் என்று பரவலாக கருதப்படுகிறது.
இவர்கள் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் குடிவரவு குடியகல்வு அமைச்சர் ஸ்காட் மோரிசன் ஜூலை மாதம் 23 ஆம் தேதியன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியவர்களிடம் நேரில் நடத்திய கலந்துரையாடல் குறித்து, மோரிசன் தெரிவித்தாக ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் இந்திய அரசின் கவனத்துக்கு வந்திருப்பதாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு உள்ளோ அல்லது இந்தியாவுக்கு வெளியிலோ சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை என்பதை இந்திய அரசு தனது கொள்கையாக கொண்டிருப்பதாக அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
அந்த அடிப்படையில் இந்த 157 பேர் தொடர்பாக இந்தியா தனது நிலைப்பட்டை தெளிவுபடுத்த வேண்டுமானால் அதற்கு முதல்படியாக, ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு செய்யவேண்டும் என்பதை இந்தியதரப்பில் இருந்து ஆஸ்திரேலிய தரப்புக்கு மிகத் தெளிவாக எடுத்துச்சொல்லப்பட்டதாக இந்திய அரசின் இன்றைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய உள்நாட்டுச் சட்டப்படி யார் யாரையெல்லாம் இந்தியாவுக்குள் ஏற்கவேண்டும் என்று கடப்பாடு இருக்கிறதோ அவர்களையெல்லாம் இந்தியா திரும்ப ஏற்றுக்கொள்ளும் என்பதே இந்தியாவின் கொள்கை என்றும், இந்தியாவின் இந்த தற்போதைய கொள்கையின் அடிப்படையில், இந்த 157 பேரில் யார் யாரெல்லாம் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் இந்திய உள்நாட்டுச் சட்டப்படி திரும்ப அழைத்துக்கொள்ளப்படவேண்டியவர்கள் என்று ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் உறுதியாக அடையாளம் காண்கிறார்களோ அவர்கள் அனைவரையும் இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ளும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.