இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு தேவையான விசாவை வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் கூறித்து, விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு இந்தியா விசா மறுத்ததாக ஊடகங்களில் வந்த செய்தியைப் பார்த்து, தான் ஆச்சரியமடைந்ததாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அருகில் இருக்கும் நாடு என்பதாலும் பெரும் எண்ணிக்கையில் இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் வசிப்பதாலும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் எந்தக் குழுவுமே வரவேண்டிய இடமாக இந்தியா இருக்கிறது. ஆகவே, தாங்கள் தலையிட்டு, சர்வதேச குழுவிற்கு விசா கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அப்படிச் செய்தால், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் நிலவும் உறுதியான உணர்வுகளுக்கு அது ஆறுதலாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியும் கோரிக்கை
தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்தியா அவர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டதாக, இலங்கை மனித உரிமை ஆணையர், தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைப் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசின் நிலைப்பாட்டையே இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு, ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு விசா வழங்க மறுத்திருப்பது ராஜபக்ஷேயின் போர்க் குற்றங்களுக்கும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்கிறதோ என்ற வேதனையைத் தருகிறது என்றும் போர்க் குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்கும் முடிவினை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் கருணாநிதி தனது அறிக்கையில் கோரியுள்ளார்.