காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயது சிறுமியினைப் கடற்படை வீரர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காரைநகர் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் பிருந்தா இந்திரகுமார், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய அதிபர் ஆகியோரின் வாக்குமூலங்கள் நேற்று திங்கட்கிழமை (21) மாலை பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிபர் தனது வாக்குமூலத்தில், மேற்படி மாணவி பாடசாலைக்கு 15 தினங்களாக வருகை தரவில்லையென தெரிவித்ததுடன், இது தொடர்பில் காரைநகர் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தருக்குத் தெரியப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் தனது வாக்குமூலத்தில், அதிபர் தனக்குத் தெரியப்படுத்தியமையடுத்து சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் அதன் பின்னரே சிறுமி பாடசாலைக்குச் செல்லாது இருந்தமை அவர்களது வீட்டிற்குத் தெரியவந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேற்படி வாக்கு மூலங்கள் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 25ஆம் திகதி வழக்கு சிறுவர் நீதவான் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது சமர்ப்பிக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேற்படி பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் ஊர்காவற்றுறை ஏலாரை கடற்படை முகாமினைச் சேர்ந்த 7 கடற்படைச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் கடந்த 21ஆம் திகதி ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, மேற்படி வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்கதக்கது.