Ad Widget

ஆவாக் குழுவினைச் சேர்ந்தவருக்கு விளக்கமறியல்

judgement_court_pinaiசிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக கூறப்படும் ஆவாக் குழுவினைச் சேர்ந்த நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி சனிக்கிழமை (19) இரவு உத்தரவிட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

‘ஆவாக்குழுவுடன் தொடர்புபட்டவர் எனத் தேடப்பட்டு வந்த, அச்சுவேலி செல்வபுரம் பகுதியினைச் சேர்ந்த 19 வயதுடைய நபர் ஒருவர் சனிக்கிழமை (19) அச்சுவேலிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

மேற்படி நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் சனிக்கிழமை (19) இரவு ஆஜர்ப்படுத்திய வேளையில் நீதவான் சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா ஆட் பிணையில் செல்ல அனுமதியளித்ததுடன், வழக்கினை திங்கட்கிழமை (21) ஒத்தி வைத்தார்.

இதனையடுத்து, சிறுமியொருவரின் கையைப் பிடித்து இழுத்தமை தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட நபரை மீண்டும் கைதுசெய்த அச்சுவேலிப் பொலிஸார், சிறுவர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மேற்படி சந்தேக நபரை கடந்த 6 மாத காலமாகத் தேடி வந்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆவாக் குழுவினைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கோப்பாய், அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து, தலைவனைத் தவிர்ந்த ஏனைய நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும், ஆவாக்குழுத் தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts