Ad Widget

சுகபோகங்களுக்காக அரசுடன் ஒட்டியிருக்கின்றது முஸ்லிம் தலைமை! – சம்பந்தன்

sampanthan“முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முஸ்லிம் தலைமை இந்த அரசுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகின்றது. மக்களை நடுத்தெருவில் கைவிட்டுவிட்டு அரசுடன் சேர்ந்து சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இது வெட்கக்கேடானது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம்கள் சேர்ந்து ஆட்சியமைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் தலைமை புறந்தள்ளியது.

எனவே, தமது தலைமைக்கு முஸ்லிம் மக்கள் பதிலடி கொடுத்தே தீருவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து தமது உரிமைக்காக முஸ்லிம் மக்கள் போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) 34 ஆவது மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இந்தநிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ் அணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி., வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ் அணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் சிரேஷ்ட உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசனலி எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ண, ஐக்கிய சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய சம்பந்தன் எம்.பி. மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“தமிழர்கள் இந்த மண்ணிலே சரித்திர ரீதியாக வாழ்ந்தவர்கள். அவர்களும் இந்த நாட்டின் இறைமை இருக்கின்றது. எனவே. அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது ஜனநாயக தீர்ப்பை நமக்கு விரும்பி அளித்துள்ளனர். எனவே, தமிழ் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்க மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் வந்த போதெல்லாம் அவற்றை நாம் பேசித் தீர்த்து ஒற்றுமையாக செயற்படுகின்றோம்.

எமது இந்த ஒற்றுமையைச் சிதறடிக்க வெளியிலிருந்து சிலர் முயற்சி செய்கின்றனர். எனினும், கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைக்க முடியாது. எம்மைப் பலவீனப்படுத்தலாம் என்று எவரும் நினைக்கவேண்டாம். நாம் ஒற்றுமைப் பாதையில் பயணித்து தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வைப் பெறுவோம். நாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளோம்.

இதனால்தான் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் எம்முடன் கேட்டறிகின்றனர். எம்முடன் பேச்சு நடத்துகின்றனர். அதேவேளை, இந்த நாடுகள் எம்முடன் பேச்சு நடத்துமாறு இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை எமது பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்படவேண்டுமென்பதில் கவனமாக இருக்கிறோம்.

எங்கள் மக்களின் இறைமை மதிக்கப்பட வேண்டும். அவர்களின் அரசியல், பொருளாதார, சமூக கலாசாரங்களை மதிக்கக் கூடிய விதத்தில் அந்த அரசியல் தீர்வு அமைய வேண்டும். இந்த நாட்டில் சிங்கள மக்களுக்குள்ள உரிமைகளை தமிழ் பேசும் மக்களுக்கும் வழங்குமாறு இந்த அரசிடம் கேட்கின்றோம். அதிகாரத்தைப் பகிரும் படி கேட்கின்றோம். நாட்டை இரண்டாக்குமாறு நாம் ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால், எமது கோரிக்கைகளுக்கு இந்த அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகின்றது. இதனால்தான் சர்வதேச தலையீடு வந்தது. இலங்கை விடத்தில் சர்வதேச நாடுகளின் தலையீடுகளுக்கு இந்த அரசே முழுப்பொறுப்பு.

இந்த அரசு சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் அல்லது எமது கோரிக்கைகளை ஏற்று தமிழ் பேசும் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கியிருந்தால் சர்வதேச தலையீடு வந்திருக்கமாட்டாது.

தமிழ் பேசும் மக்களுக்கு மாகாணசபை பெரும் சொத்து. ஆனால், ஆளும்தரப்பில் உள்ளவர்கள் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுடன் இணைந்து முஸ்லிம் தலைமை ஆட்சி நடத்துகின்றது. முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முஸ்லிம் தலைமை இந்த அரசுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகின்றது, மக்களை நடுத்தெருவில் நிற்கவிட்டுவிட்டு அரசுடன் சேர்ந்து சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இது வெட்கக்கேடானது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லிம்கள் சேர்ந்து ஆட்சியமைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் தலைமை புறந்தள்ளியது. எனவே, தமது தலைமைக்கு முஸ்லிம் மக்கள் பதிலடி கொடுத்தே தீருவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து தமது உரிமைக்காக முஸ்லிம் மக்கள் போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இதேவேளை, இந்தியாவின் புதிய அரசு மௌனமாக இருக்கிறது என்பதற்காக இலங்கை தமிழ் மக்கள் மீது அதற்கு அக்கறையில்லையென்று கருதக்கூடாது. உரிய நிலை வருகின்றபோது எல்லாமே நல்ல மாதிரி நடைபெறும்.

இந்தியா இலங்கையின் அயல்நாடு மாத்திரமல்ல. ஒரு பிராந்திய வல்லரசாகவும் திகழ்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அயல்நாடு எல்லாவற்றுடனும் சிநேகித நிலையைப் பேணவும் வளர்க்கவுமே விரும்பும். அந்தக் கொள்கை நியாயமானது. அவ்விதமான நிலைப்பாட்டையே இலங்கையுடனும் தொடர முற்படுகின்றது.

இலங்­கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாத பாரிய பிரச்சினையொன்று இருக்கிறது. அது தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதற்காகவே இந்தியா நீண்ட காலமாக செயற்பட்டு வந்திருக்கிறது. இந்தியாவின் இந்த முயற்சியானது 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் 13ஆவது அரசியல் சாசனத்திருத்தம் ஆகியன அதனடிப்படையில் உண்டாக்கப்பட்ட விடயங்களாகும். கடந்த காலங்களில் இந்தியாவுக்கு பல்வேறு வாக்குறுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு அளித்துள்ளது. ஆனால், அவற்றை ராஜபக்‌ஷ நிறைவேற்றவில்லை. இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண வைபவத்திற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சென்றிருந்தார். வைபவம் முடிந்த மறுநாள் புதிய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி சந்தித்து உரையாடிய வேளையில் இந்தியாவுக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் பற்றி இந்தியப் பிரதமர் வினவியுள்ளார்.

இந்திய மத்தியரசின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டில்லி சென்று வருவதற்கு முன்பு மக்களுக்கு எதையும் சொல்ல முடியாது. அது விடயமாக பேசுவது ஏற்றதல்ல. அப்படி பேசுவது பாதகமாக அமையலாம். ஆனால், நடைபெற வேண்டிய கருமங்கள் நன்றாகவே நடைபெறுமென மக்களுக்கு கூற விரும்புகின்றோம்.

சர்வதேச மத்தியஸ்தத்துடன் எமக்கான நிரந்தர தீர்வு விரைவில் கிடைக்கும். நாம் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும்” – என்று சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

Related Posts