போர்க்கால குற்றங்களையும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரிக்கும்

இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓராண்டுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை வரம்பு, யுத்தத்தின்போது ஏற்பட்ட மக்கள் உயிரிழப்புகள் தொடர்பாகவும் விசாரிக்கும் விதத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

lanka_disappeareneces_3missing

2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டு யுத்தத்தில் ஏற்பட்ட மக்கள் உயிரிழப்புகளின்போது ‘இராணுவத்தாலும் விடுதலைப் புலிகளாலும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் நடந்துள்ளனவா’ என்று தமது ஆணைக்குழு விசாரிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமது ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கவுள்ள சர்வதேச சட்டநிபுணர்களான சேர். டெஸ்மண்ட் டி சில்வா, பேராசிரியர் ஜெஃப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேண் ஆகியோர் ஓரிரு வாரங்களில் இலங்கை வந்தவுடன் விசாரணைக்கான பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

‘உயிரிழப்புகளின்போது இராணுவத்தினர் தங்களின் பணிக்குரிய கடமையை மீறி செயற்பட்டுள்ளார்களா என்றும், விடுதலைப்புலிகளும் இந்த யுத்தத்தின்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மீறிச் செயற்பட்டனரா என்றும் எங்கள் ஆணைக்குழுவின் விசாரணையில் ஆராயப்படும்…’ என்றார் மக்ஸ்வெல் பரணகம.

உங்கள் ஆணைக்குழுவின் விசாரணைகள் சுயாதீனமாக அமையும் என்று நீங்கள் எப்படி உத்தரவாதம் அளிப்பீர்கள் என்று அவரிடம் வினவிய போது…

‘எங்கள் ஆணைக்குழு கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பில் இரண்டு தடவைகள், இப்படி மக்கள் மத்தியில் விசாரணை அமர்வுகளை நடத்தியிருந்தது…மக்கள் கொடுத்திருந்த எழுத்துமூல முறைப்பாடுகள் பற்றித்தான் நாங்கள் விசாரித்தோம். அந்த விசாரணைகளின்போது நாங்கள் வெளிப்படையாக செயற்பட்டோம்’ என்று கூறிய பரணகம, தமது எதிர்கால விசாரணைகள் வெளிப்படையாகவே அமையும் என்றும் கூறினார்.

ஆனால், கிளிநொச்சியில் உங்களின் அமர்வு நடந்தபோது, சிவில் உடையில் இருந்த பொலிஸ் குழுக்கள் காணாமல்போனவர்களின் உறவினர்களை அச்சுறுத்தி, கட்டாய மரண சான்றிதழ் பெறும்படி பலவந்தப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என்று ஆணைக்குழு தலைவரிடம் சுட்டிக்காட்டியபோது.

தமது விசாரணை நடவடிக்கைகளில் பொலிஸ் அதிகாரிகள் தொடர்புபடுத்தப்படவில்லை என்று கூறிய பரணகம, ‘நாங்கள் அமர்வுகளை நடத்திய தினங்களில் அரசாங்கத்தின் வேறு தரப்பினர் வழமையான மரணச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தியிருந்தனர். அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை’ என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, ‘பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எங்களின் ஆணைக்குழு நியமிக்கப்பட முன்னைய காலத்திலிருந்தே சாதாரண சட்டங்களின்படி இயங்கிவந்தவர்கள். எங்களின் ஆணைக்குழுவுக்கு முன்னர் மக்கள் அவர்களிடம் தான் முறைப்பாடுகளை செய்திருந்தனர். அவர்களும் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்’ என்றார் ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர்.

‘முல்லைத்தீவில் நாங்கள் அமர்வை நடத்தியிருந்த அதே தினத்திலேயே பயங்கரவாத புலனாய்வு பிரிவினரும் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தனர். எனவே பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதி, இனிமேல் அப்படி நாங்கள் விசாரணை நடத்தும் நாட்களில் அவர்களின் விசாரணைகளை நிறுத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றோம்’ என்றும் கூறினார் பரணகம.

ஏற்கனவே தமது ஆணைக்குழு நடத்திவந்துள்ள விசாரணையின்படி, காணாமல்போனவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இருந்தால், அவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அந்த முறைப்பாடுகள் தொடர்பில் சாட்சியங்கள் இருந்தால், சட்டமா அதிபர் அலுவலகத்தின் ஊடாக வழக்குத் தொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்ஸ்வெல் பரணகம கூறினார்.

Related Posts