காரைநகர் ஊரி கிராமத்துக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் இன்று ஞாயிற்றுக்கிழமை (20.07.2014) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கடற்படைச் சிப்பாய் ஒருவரால் ஊரிக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அண்மையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே. இந்தச் சம்பவத்தையடுத்து வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்றிருந்தனர். இதன்போது பிரதேசவாசிகள் தாங்கள் குடிநீருக்காகப் படுகின்ற அவலத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
வழமையாகவே குடிநீருக்கான பற்றாக்குறைவு நிலவும் காரைநகரில் இம்முறை கடும் வரட்சி காரணமாக அநேகமான கிணறுகளில் சொட்டுத் தண்ணீரைக் கூடக் காணமுடியவில்லை. அநர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் குடிநீருக்காக வழங்கப்பட்டுள்ள நிதியும் போதாது இருப்பதால், காரைநகர் பிரதேச சபையால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே குடிநீரை விநியோகிக்க முடிகிறது.
இதனையடுத்தே ஊரிக் கிராமத்துக்கான குடிநீர் விநியோகத்தை காரைநகர் பிரதேச சபையுடன் இணைந்து மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஊரிக்கு நாள்தோறும் இரண்டு தடவைகள் பவுசர் மூலம் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது,
இரணைமடுவில் இருந்து தீவகத்துக்குத் தண்ணீர் எடுத்துவருவதற்கு வடக்கு மாகாணசபையை வற்புறுத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்குக் குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்தியதாகவும், அதற்கு எங்களைப் போன்றுதான் கிளிநொச்சி மக்களும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதால் இரணைமடுத் தண்ணீர் எங்களுக்கு வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மறுத்து விட்டதாகவும் நீங்கள் என்னிடம் கூறியுள்ளீர்கள்.
குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாத நிலையிலும் உணர்ச்சி வசப்படாமலும், ஏமாற்று நடவடிக்கைகளுக்குப் பலியாகாமலும் தெளிவான பதிலைச் சொன்ன ஊரி மக்களை நான் பாராட்டுகின்றேன்.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று அடம் பிடிப்பவர்களின் பின்னால் பெரிய அரசியல் சூழ்ச்சி மறைந்து கிடக்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் உணவு உற்பத்தியை நிர்மூலமாக்கி உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வடக்கு மக்கள் எப்போதும் அரசிடம் கையேந்த வைப்பதற்காகவே வடக்கின் குடிநீருக்கு வேறு மாற்றுத்திட்டங்கள் இருந்தும் இரணைமடுத்திட்டத்தை மட்டுமே ஒரே தீர்வாக அரசும் அதன் ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
பவுசர்கள் மூலம் நாம் மேற்கொள்ளும் நீர் விநியோகம் தற்காலிகமானது. ஊரிக் கிராமத்துக்கு மாத்திரம் அல்லாமல் தீவகம் முழுவதற்கும் சுத்தமான குடிநீரை தேவையான அளவு விநியோகிக்கும் நிரந்தரமான திட்டத்தை வடக்கு மாகாண சபை அதன் ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் செய்து முடிக்கும் என்று உறுதி கூறுகின்றேன் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், வே.சிவயோகன்,காரைநகர் பிரதேசசபைத் தவிசாளர் வே. ஆனைமுகன் மற்றும் ஊரிக்கிராமமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.