யாழ்.மாவட்டக் கடற்தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிற்துறை ஒன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக அவர்களது வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தறிந்து கொண்டார்.
யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (18) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது, கடற்பாசி எனப்படும் கடல் தாவரத்தை யாழ். மாவட்டக் கடற்பரப்பில் நடுகை செய்வதின் ஊடாக கடற்தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் ஒன்றை முன்னெடுக்க அதிக வாய்ப்புள்ளது.
அதுமட்டுமன்றி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், வருமானத்தையும் அதிகரிக்க முடியும். இதன்மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இம்மாற்றுத் தொழில் சிறந்த பயனைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
அந்த வகையில் ஹேலிஸ் என்கின்ற தனியார் நிறுவனம் ஒன்று ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தில் இக்கடற்பாசித் திட்டத்தை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், அதனை யாழ். மாவட்டக் கடற்பரப்பிலும் விரிவாக்கம் செய்யவுள்ளது. இது தொடர்பிலான விளக்கத்தைக் குறித்த நிறுவனத்தின் அதிகாரி விளக்கினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், கடற்தொழிலாளர்களுக்கு இத்தொழிற்துறையானது மாற்றுத் தொழிலாகவும், நிரந்தர மாதாந்த வருமானத்தையும் பெற்றுத்தரும் வகையில் அந்தந்தப் பிரதேச செயலர்களுடன் இணைந்து துறைசார்ந்தோர் செயற்பட வேண்டும் எனவும், இது தற்போது செய்யும் கடற்தொழில் நடவடிக்கைகளுக்குத் தடையில்லாமல் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்படுவது முக்கியமானதென்றும் சுட்டிக்காட்டினார்.