2014 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் படி இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 0.42 வீதமான நிதியே வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைக் கொண்டே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். எடுத்தவுடன் வடக்கு மாகாண சபை என்ன செய்கின்றது என்ற கேள்வியினை எழுப்பாது பொறுத்திருந்து பாருங்கள் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மண்டைதீவு மக்களது நலனைக் கருத்திற் கொண்டு இங்கு வைத்தியசாலை மீண்டும் புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் 1954 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த கொத்தலாவல இந்த வைத்தியசாலையினைத் திறந்து வைத்தார். மீண்டும் 60 ஆண்டுகளுக்கு பின்னர் நீதியரசரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான விக்கினேஸ்வரன் திறந்து வைத்துள்ளார்.
இவ்வாறான நல்ல விடயங்களால் வைத்தியசாலை பெருமையடைகின்றது. மேலும் குறித்த வைத்தியசாலைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வடக்கு மாகாண சபை ஏற்படுத்திக் கொடுக்கும் நன்ற நம்பிக்கை எனக்குண்டு.
30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த யுத்தம் 2009 ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டது.
எனவே எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஏனும் 38 பேரும் இணைந்து மேற்கொள்வோம். விசேட தேவைகளை வடக்கு மாகாணத்தில் செய்ய உத்தேசித்துள்ளோம். இதற்கான அபிவிருத்திக்கு என அறிஞர் குழாம் உருவாக்கப்பட்டு எதிர்காலத்திட்டங்களுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும் 2014 ஆம் ஆண்டுக்கு என ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணத்திற்கு 0.42வீதமான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டே தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே அதற்கு காலம் எடுக்கும். அதற்காக வடக்கு மாகாண சபை என்ன செய்கின்றது என்று பலர் கேட்கின்றனர்.
இதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றே கூறமுடியும். மண்டைதீவில் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்ப வாய்ப்புக்கள் உண்டு.
எனவே வடக்கு மாகாண சபை வசதிகளை உருவாக்கும் இந்த வைத்தியசாலையில் ஆடு , மாடுகள் படுக்கவிடாது பாதுகாப்பதற்கு அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் மேலும்தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி