வடமாகாண ஆளுநரை நியமிப்பது தொடர்பில், வடமாகாண சபை ஆளுங்கட்சியினருடன் அரசாங்கம் கலந்தாலோசித்து செய்ய வேண்டும் என்று கூறுவதைப் போல, அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் நன்றாக இருக்குமென வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.
வடமாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வரையறைக்கு வரம்பு உண்டு. ஆனால் நீங்கள் அந்த வரையறைப்படி செயற்படவில்லை. ஆளுநரை நீக்க வேண்டுமாயின் சரியான முறையிலே ஆதாரங்களுடன் பிரேரணையை கொண்டுவர வேண்டும்.
ஆளுநர் விடயத்தில் அரசாங்கம் உங்களுடன் இணைந்து செயற்படவில்லை எனக் குறை கூறுகிறீர்கள். ஒரு விடயத்தில் மாத்திரம் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என நினைக்கிறீர்கள். மற்ற விடயங்களுடன் அவ்வாறு இணைந்து செயற்பட நினைப்பதில்லை.
ஆளுநர் விடயத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைப்பதை போல ஏனைய விடயங்களுடனும் அரசுடனும் இணைந்து செயற்பட்டால் அது நன்றாக இருக்கும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.