வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும் கொழும்பு உட்பட தென்பகுதிக்கு சென்று வரும் பயணிகளில் மாதாந்தம் சுமார் 10 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் தலா 5 பேர் வீதம் பயணிகள் இந்நோய்க்கு இலக்காகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொழும்பு உட்பட தென்பகுதிகளுக்குச் சென்று வரும் வடமராட்சி பிரதேசவாசிகள் மிக அவதானமாக இருப்பதுடன் சிறு நோய் வந்தால்கூட அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று டெங்கு நோய் ஏற்படாத வண்ணம் பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
டெங்கு நோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அல்வாய் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையினால் இக்கிராமத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.