இலங்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழு இன்று (15) உத்தியோகபூர்வமாக தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இவ் விசாரணைக் குழுவின் ஆலோசகர்களாக மார்ட்டி அத்திசாரி, சில்வியா கட்ரைட் மற்றும் அஸ்மா ஜஹங்கிர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் கடந்த ஜூன் மாதம் விசாரணைகள் இடம்பெற்றபோதும் இன்று முதல் விசாரணைக்குழு உத்தியோகபூர்வமாக இயங்கவுள்ளது.
இந்த விசாரணைகள் 10 மாதங்கள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் மாநாட்டில் இவ் விசாரணைக்குழு இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இலங்கைக்குள் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.