கடற்படைத் தேவைக்காக சுவீகரிப்புச் செய்யப்படவுள்ள தமது காணிகளை துப்புரவுசெய்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு தாம் குடியமரப் போகின்றோம் என்று காணி உரிமையாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.அத்துடன் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை துப்புரவு செய்து குடியமர்வதற்கு, வலி.வடக்குப் பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
கடற்படையினரின் தேவைக்காக நகுலேஸ்வரத்தில் பொது மக்களின் 183 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவற்றை சுவீகரிப்பதற்கு முன்னோடியாக காணிகளை அளவீடு செய்வதற்கு நிலஅளவைத் திணைக்களத்தினர் நேற்று அந்தப் பகுதிக்கு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையறிந்து காணி உரிமையாளர்கள் அந்தப் பகுதியில் கூடினர். அந்தப் பகுதியில் கடற்படை முகாமுக்கு முன்னால் ஒன்றுகூடி படையினருடன் கலந்துரையாடினர்.
இதன் போது உயர்பாதுகாப்புக்கு வெளியே உள்ள தமது காணிகளை துப்புரவு செய்யப் போவதாகவும் அவர்கள் கடற்படையினரிடம் தெரிவித்தனர்.
எனினும் இதனை ஏற்க மறுத்த கடற்படை அதிகாரி “இது தொடர்பில் மேலிடத்தில் கேட்டே பதில் சொல்ல முடியும்’ என்று மக்களுக்கு பதில் அளித்தார். இதனை மறுதளித்த மக்கள் தாம் காணிகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை துப்புரவு செய்கின்றோம்.
நீங்கள் எம்மை அடித்து விரட்டக் கூடாது என்று கடற்படையினரிடம் தெரிவித்திருந்தனர். எனினும் கடற்படையினர் மக்கள் கருத்துக்கு எந்தப் பதிலும் வழங்கவில்லை.
இந்த நிலையில், உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியிலுள்ள தமது காணிகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை துப்புரவு செய்வதென்று தீர்க்கமாக மக்கள் முடிவெடுத்தனர். அத்துடன் மக்களினால் மேற்கொள்ளப் படும் இந்த நடவடிக்கைக்கு தமது முழுமையான ஆதரவை பிரதேச சபை வழங்கும் என்று தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.