கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கடலினுள் அமிழ்த்தப்பட்ட நபர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் அடங்கிய நண்பர் குழுவொன்று, கசூரினாக் கடற்கரையில் மது அருந்தியுள்ளனர். இதன்போதே, இவர்களில் நால்வர் இணைந்து, மற்றைய நபரைத் தூக்கிச் சென்று கடலினுள் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதனை அவதானித்துள்ள, கடலில் ஆபத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்றும் பணியாளர்கள், குறித்த நபரைக் காப்பாற்றி கரை சேர்த்ததுடன், இவ்விடயத்தினை அங்கு கடமையில் நின்ற பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து, மேற்படி நால்வரும் தப்பித்து ஓட முயன்ற போதும், அவர்களில் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
சும்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.