இலங்கையில் சிகரெட் பெட்டிகளில் சுகாதார எச்சரிக்கைப் படங்களை பிரசுரிக்குமாறு அரசாங்கம் வெளியிட்ட உத்தரவை எதிர்வரும் டிசம்பர் 31-ம் திகதிவரை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
எனினும், அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் சிகரெட் பெட்டிகளில் கட்டாயமாக இந்த எச்சரிக்கைப் படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அடிக் என்ற போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தொண்டுநிறுவனத்தின் இயக்குநர் புபுது சுமனசேகர கூறினார்.
சிகரெட் பெட்டியின் 60 வீத மேற்பரப்பில், புகைத்தலினால் ஏற்படும் உடல் பாதிப்புகளைக் காட்டுகின்ற எச்சரிக்கை படங்களை பிரசுரிக்க வேண்டுமென்று சுகாதார அமைச்சர் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தது.
எனினும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவைப்படுவதாக இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனம் (சிலோன் டொபேக்கோ கம்பனி) நீதிமன்றத்திடம் கோரியது.
இந்த கோரிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம், அரசாங்கத்தின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை வரும் டிசம்பர் மாதம் 31 திகதி வரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, 2015 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் எச்சரிக்கைப் படம் பிரசுரிக்காத சிகரெட் பெட்டிகளில் உள்ள சிகரெட்டுகளை சந்தையில் விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகள் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.